அன்புடன் வரவேற்கின்றோம்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

வைகை நதிக்கரை நாகரிகம் கீழடி –தமிழர்களின் தாய்மடி

               சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த  தமிழ் குடிகளின் நாகரிக வாழ்வை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது கீழடி. இந்த ஊர் மதுரைக்கு அருகில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட முக்கிய நதியான வைகை ஆற்றின் நாகரிகத்தை ஆராய்வதற்காக பெங்களூரில் உள்ள மத்திய அரசின் தொல்லியல் துறையானது அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2013-ஆம் ஆண்டு தொல்லியல் குழு ஒன்றை அனுப்பியது. இந்த குழுவானது வைகை நதியின் மூல ஆற்றிலிருந்து முடியும் இடமான அழகன்குளம் வரை ஆய்வை மேற்கொண்டது. தொடக்க கட்ட ஆய்வில் பழமையான தொல்லியல் எச்சங்கள் 100க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்விடங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஆய்வை மேற்கொண்ட  குழுவானது சுமார் 5300 க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்களை மைசூரில் உள்ள தொல்லியல் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் கிடைத்துள்ள பொருட்கள் இந்திய வரலாற்றை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் இருந்ததால், இந்த ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு மூன்றாம் கட்ட ஆய்வில் ஸ்ரீராம் தலைமையில் மத்திய தொல்லியல் துறையானது ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் போது குறிப்பிடத்தக்க எந்த தொல்லியல் எச்சங்களும் பெறப்படவில்லை என்று அறிக்கையாக வெளியிடப்பட்டது. பின்னர் இந்த அகழ்வாராய்ச்சி ஆனது மூடப்பட்டது. கீழடி மூடப்படுவது தமிழர்களின் வரலாற்றை மூடி மறைப்பதற்கான திட்டமிட்ட சதி என்று  தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அதன் விளைவாக தமிழக அரசு 2017 ஆம் ஆண்டு இருந்து தற்போது வரை நான்காம் கட்ட மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை அறிக்கையாக வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் தமிழர்களின் வரலாற்றை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் அமைந்துள்ளது. அதாவது தமிழ் பிராமி எழுத்துக்கள் அறிமுகமான காலத்தைச் சங்ககாலம் என்பர். இது கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். ஆனால் தற்போது உள்ள இந்த தொல்லியல் பொருட்களை ஆராயும் பொழுது அவை கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்று இருக்கின்றார் என்பது தெளிவாகிறது. மேலும் இதில் ஆதன், குதிரன் என்று எழுதப்பட்ட மண்பாண்டங்கள், செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களும், உறைகிணறுகள், தங்கத்தாலான ஆபரணங்களும், 13 அடி நீளமுள்ள சுவர், கண்ணாடியாலான பாசிகள் ரோம் நாட்டின் கலை அம்சம்களை கொண்ட மண்பாண்டங்கள், கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் அலங்கரிக்கப்பட்ட மண்பாண்டங்கள், எலும்புகளாலான எழுத்தாணிகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் தாயக் கட்டைகள், நொண்டி அல்லது பாண்டி என்று அழைக்கப்படும் விளையாட்டுக்கு பயன்படும் வட்டசில்லுகள், திமிரான காளை மாடுகளின் கொம்புகள், எருமை மாடுகள், கலைமான், மயில், காட்டுப்பன்றி ஆகியவற்றின் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்யும்பொழுது தமிழர்கள் ரோம் நகரத்துடன் வணிகத் தொடர்பு, உலோகங்களை வார்க்கும் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு அம்சங்கள், உணவிற்காக ஆடு,மாடுகளை பயன்படுத்தி வேளாண்மை செய்யும் தொழில், எழுத்தறிவு மற்றும் கட்டுமான தொழில்நுட்பம் ஆகியவற்றை  நன்கு கற்றறிந்து இருக்கின்றனர் என்பது புலனாகிறது. சிந்து சமவெளி நாகரிகம் கீழடி நாகரிகம் ஒரே காலகட்டத்தில் சார்ந்தவராக இருப்பினும், இவை இரண்டையும் தொடர்பு படுத்துவது சிக்கலாக தான் இருக்கிறது. ஏனென்றால் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துக்கள் படிக்க முடியாத சித்திர எழுத்துக்கள் ஆகும். ஆனால் கீழடில் உள்ள எழுத்துக்கள் தமிழ் பிராமி எழுத்துக்கள் ஆகும். சிந்து சமவெளி மக்கள் தெய்வ வழிபாட்டை பின்பற்றினார். கீழடியில் கடவுள் சம்பந்தமான எந்த ஒரு பொருளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இதுவரை கண்டுபிடித்த நகர நாகரிகம் எல்லாம் வற்றாத ஜீவநதி கொண்டுள்ளன. ஆனால் வைகையாறு வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வரும். ஆகவே இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சிறந்த நீர் மேலாண்மையை பின்பற்றி இருக்கலாம் என கருதப்படுகிறது. கொடுமணல், மணலூர், கடலடி, ஆதிச்சநல்லூர், திருவள்ளூர் மற்றும் கீழடி ஆகியவற்றில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் தமிழரின் தொன்மையும் தமிழர் வாழ்வையும் பறைசாற்றுகின்றன. எனவே மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைத்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக